காலை நேரம் பெரும்பாலான வீடுகள் பரபரப்பாக இருக்கும். பல சமயங்களில் உங்கள் அலாரக் கடிகாரத்தை ஒத்திவைத்தபடி இருந்தாலும், வேலைக்கு நேரமாகிவிட்டால் எழுந்து கிளம்பிதான் ஆக வேண்டும். அதுவும் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். இதையெல்லாம் தாண்டி காலை உணவு என்பது கடைசியாகத்தான் நம் நினைவிற்கே வரும். பரபரப்பான வாழ்வில் காலை உணவைத் தவிர்ப்பது என்பது மிகவும் பொதுவான ஒன்றாகவே மாறிவிட்டது. ஆனால் தொடர்ச்சியாக அப்படிச் செய்வதால் பல அபாயகரமான பிரச்சினைகள் உண்டாகும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
காலை உணவு என்பது மிகவும் முக்கியமான உணவாகும், அதைத் தவிர்ப்பதால் இதய நோய்கள் உண்டாவதற்கான காரணங்கள் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலை உணவு ஏன் முக்கியம்?
ஹைதராபாத்தில் உள்ள நியூட்ரிகிளினிக்கை நிறுவியவரும் உணவியல் ஆலோசகருமான தீபா அகர்வால், “வளர் சிதை மாற்றத்தை மேம்படுத்தி சக்தியை வழங்குவதோடு மட்டும் அல்லாமல், காலை உணவு நினைவாற்றையும் கவனத்தையும் அதிகரிக்கும். லோ டென்சிட்டி லிப்போ புரோட்டின் (LDL) அளவுகளைக் குறைத்தல், சிறு வயதிலேயே நீரிழிவு நோய் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சினைகள் வருவதைக் குறைத்தல், உடல் பருமனைக் குறைத்தல் ஆகியவற்றுக்கும் இது உதவும். தசை மற்றும் மூளை இயக்கத்திற்குத் தேவைப்படும் ரத்த சர்க்கரையையும் இது வழங்கும்.
காலை உணவு உங்கள் உடலின் செயல்பாட்டைத் தொடங்க உதவும் என்று ஹைதராபாத்தில் உணவு ஆராய்ச்சியாளராகவும் சீனியர் உணவியல் ஆலோசகராகவும் உள்ள ஜோதி சாப்ரியா சொல்கிறார். காலை உணவைத் தவிர்ப்பது வளர் சிதை மாற்றத்தை மெதுவாக்கி உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உடல் எடை அதிகரிக்கும்போது உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிலிஸரைடு அளவுகளும் அதிகரிக்கும். இதனால் தமனிகளில் அடைப்பு ஏற்படும். இப்படித்தான் அது உங்கள் இதயத்தை பாதிக்கும்” என்று தேசிய விருதுபெற்ற உணவியலாளர் சாப்ரியா தெரிவிக்கிறார்.
காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் தீமைகள்
அமெரிக்காவில் மூன்றாவது தேசிய ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வுக் கருத்துக்கணிப்பின் (NHANES III) பகுதியாக 2019-இல் ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி 6,550 பெரியவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி நடத்திய கோஹர்ட் ஆய்வில் காலை உணவைத் தவிர்த்தவர்களுக்கு அதிரோஸ்கிலிரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும், மாரடைப்பு அல்லது பக்க வாதம் ஏற்பட்டு மரணிக்கும் வாய்ப்பும் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
“இதன் அடிப்படை என்னவென்றால் இஷ்டப்பட்ட நேரத்தில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் காலை உணவைத் தவிர்த்துவிட்டு அதிகப் பசிக்கு ஆளாகி பிறகு அதிகக் கலோரிகள் உள்ள தின்பண்டங்களை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகின்றனர். இதனால் உடல் பருமனும் ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. அதன் விளைவாக இதய நோய்கள் வருகின்றன” என்று அமெரிக்காவின் அர்பானாவில் உள்ள OSF ஹெல்த்கேர் கார்டியோவாஸ்குலார் இன்ஸ்ட்டிடியூட்டில் இன்டர்வென்ஷ்னல் இதயவியல் நிபுணரான, மருத்துவர் அலா உஜ்ஜைலி சொல்கிறார்.
காலை உணவைத் தவிர்ப்பதால் ஆரோக்கியமற்ற சாப்பிடும் பழக்கங்கள் ஏற்படும் என்று இலினாய்ஸைச் சேர்ந்த இதயவியல் செவிலியர் ஆம்பர் கிங்கேரி சொல்கிறார். அத்துடன் காலை உணவைத் தவிர்ப்பவர்கள் உடலுக்குக் குறைவான வேலையே தருவார்கள் மற்றும் அவர்களுக்கு சக்தி குறைவாக இருக்கும். இரவு உணவை இஷ்டப்பட்ட நேரத்தில் எடுத்துக் கொள்வார்கள், பசியைப் போக்க அடிக்கடி நொறுக்குத் தீனி சாப்பிடுவார்கள். அதில் பதப்படுத்திய மாமிசமும் அடங்கும், என்றும் அவர் தெரிவிக்கிறார்.
சாப்பிடுவதைத் தவிர்ப்பது மற்றும் இடைப்பட்ட விரதம்
காலை உணவைத் தவிர்ப்பதால் இதய நோயுக்கு உள்ளாகி மரணிப்பது அதிகரிக்கிறது என்று ஜர்னல் ஆஃப் தி அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அன்ட் டயட்டடிக்ஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் முதன்மை எழுத்தாசியராக இருந்த அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் யங்போ சன், ஹேப்பியஸ்ட் ஹெல்த்தை இமெயில் மூலம் தொடர்புகொண்டார். அதில் இந்த ஆய்வு காலை உணவைத் தவிர்ப்பதைக் குறித்து மட்டுமே ஆராய்ந்தது, இடைப்பட்ட விரதம் குறித்து ஆராயப்படவில்லை என்று தெரிவித்தார்.
“உணவைத் தவிர்ப்பது மற்றும் இடைப்பட்ட விரதம் இரண்டுமே வெவ்வேறு விஷயங்கள். இடைப்பட்ட விரதம் என்பது நேரக் கட்டுப்பாட்டுடன் அனைத்து வகையான உணவுகளையும் கலோரி உள்ள பானங்களையும் எடுத்துக் கொள்ளும் முறை ஆகும். ஆனால் குறிப்பிட்ட கால வரம்பில் (உதாரணமாக, எட்டு மணிநேரம்). இருந்தாலும், எங்கள் ஆய்வில் பங்குகொண்டவர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு வேளை உணவையோ பல வேளை உணவுகளையோ தவிர்த்து பிற நேரங்களில் அதிக நொறுக்குத் தீனி சாப்பிட்டவர்களாக இருந்தார்கள். எனவே எங்கள் ஆய்வை நேரடியாக இடைப்பட்ட விரதத்திற்குப் பொருத்திப்பார்க்கக் கூடாது.
இடைப்பட்ட விரதம் உடலை அவ்வப்போது டீடாக்ஸ் செய்ய உதவினாலும், சிறந்த ஆரோக்கியத்திற்கு ஒரு நாளில் ஆறு வேளை சாப்பிடுமாறு தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கிறார்.
நீரிழிவு நோய் அல்லது இதய நோய்கள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் தங்களின் கலோரி அளவைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். “ஆரோக்கியமாக உள்ள பிறர் தங்கள் உடல் சொல்வதைக் கேட்க வேண்டும். உங்களுக்கு 9 மணிக்கு பசிக்கும் என்று தெரிந்தால், 7 மணிக்கே காலை உணவை எடுத்துக்கொள்வது நல்லது.” என்று அவர் கூறுகிறார்.
இதயத்திற்கு நன்மை தரும் காலை உணவு
இதயத்திற்கு நன்மை தரும் வகையில் ஊட்டச் சத்துகள் நிறைந்த உணவைக் காலை உணவாகச் சாப்பிடுவதால் நாளின் தொடக்கத்திலேயே உங்கள் இதயத்திற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அவர் ஐந்து உணவுக் குழுக்களையும் (பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரத உணவுகள் மற்றும் பால் வகை) உள்ளடக்கிய பதப்படுத்தாத உணவு வகையைத் தேர்வுசெய்வது நல்லது என்று பரிந்துரைக்கிறார். இவற்றில் இவை அடங்கும்:
- முட்டைகள், கிரீக் யோகர்ட் வகைகள் (குறைவான சர்க்கரை), புரதத்திற்கு பருப்புகள்
- ஆரோக்கியமான கொழுப்பிற்குக் கொட்டைகள், ஆலிவ் ஆயில், அவாகாடோ
- நார்ச் சத்து மற்றும் கார்போஹைட்ரேட்களுக்கு முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள்
இதயத்திற்கு நலம் செய்யும் உணவைத் தயாரிக்க நேரம் இல்லாதவர்கள் அதற்கு மாற்றாகக் கொட்டைகள் அல்லது சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் வளர் சிதை மாற்றத்தைத் தொடங்கச் செய்யலாம் என்று சாப்ரியா சொல்கிறார். வெறும் வயிற்றில் மட்டும் இருக்கக் கூடாது என்று அவர் கூறுகிறார். “காலை உணவை ராஜாவைப் போல் சாப்பிடுங்கள், மதிய உணவை இளவரசனைப் போலச் சாப்பிடுங்கள், இரவு உணவைப் பரதேசி போலச் சாப்பிடுங்கள்” என்ற எழுத்தாளர் அடேல் டேவிசின் வாக்கியத்தை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- தொடர்ச்சியாகக் காலை உணவைத் தவிர்த்தால் இதய நோய்கள் உண்டாவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
- காலை உணவைத் தவிர்த்தால் உடல் பருமனிற்கு வழிவகுக்கும், உயர்ந்த கொலஸ்ட்ரால் அளவு, சரியற்ற உணவுமுறை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- இதயத்திற்கு நன்மை தரும் காலை உணவை எடுத்துக் கொள்வதால் நாளின் தொடக்கத்திலேயே உங்கள் இதயத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.