வயதாக வயதாக நம்முடைய பகுத்தறிவு அதிகமாகிக்கொண்டே செல்கிறது, அதே போல இதயத்திலும் சிக்கல்கள் ஏற்படத் தொடங்குகிறது. ஒரு மனிதனுக்கு வயதாகும்போது, இதயத்திற்கும் வயதாகிறது, இதனால் அதன் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. அத்துடன் மற்ற உறுப்புகள் முதுமை அடைவதாலும் இதயத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கடுமையான மூச்சுத் திணறல், மார்பு வலி அல்லது லேசான தலைவலி போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டால், அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், வயதானவர்களுக்குப் பொதுவாக ஏற்படும் இதயப் பிரச்சனைகளில் ஒன்று குறைந்த இதயத் துடிப்பு பிரச்சனையாகும், இதனால் இதயச் செயலிழப்பு ஏற்படக்கூடும்.
வயதாகும் போது நம்முடைய இதயத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது?
பெங்களூரு மில்லர்ஸ் சாலையில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனையின் இருதயவியல் ஆலோசகர் டாக்டர் சுனில் திவேதி கூறுகையில், “இதயம் மட்டும் தனியாகச் செயல்படுவது கிடையாது. நரம்பு மண்டலம், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் ஆகிய அனைத்தும் அதனுடன் இணைந்து செயல்படுகிறது, ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இதயத் தசைகள், வயதாகும் போது கடினமாகி, ஒரு கட்டத்தில் ரத்தத்தை உந்தித் தள்ளும் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, இது இதயச் செயலிழப்புக்கு வழிவகுக்கும்” என்கிறார்.
குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லாத ஆரோக்கியமான மனிதர்களுக்குக் கூட, 65 வயதுக்குப் பிறகு ஏற்படும், வயது தொடர்பான சிக்கல்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இருதயநோய் நிபுணர் (senior interventional cardiologist) டாக்டர் அபிஜித் விலாஸ் குல்கர்னி, இதய நோய்க்கான மிகவும் பொதுவான மற்றும் மாற்ற முடியாத ஆபத்தான காரணியாக இருப்பது நம்முடைய வயது என்கிறார். “வயது தொடர்பான இதயப் பிரச்சனைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் இதயத்தின் ரத்த ஓட்ட அமைப்பில் உள்ள சிக்கல்கள், ரத்தத்தை உந்தித் தள்ளும் திறன் மற்றும் வால்வு தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை அடங்கும்” என்று அவர் தெரிவிக்கிறார்.
இதய நோயை மருத்துவர்கள் எவ்வாறு கண்டறிவார்கள்?
அனைத்து முதன்மை அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் வயதானவர்களுக்கு எந்த மாதிரியான இதய நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிவது சற்று சவாலான விஷயம்தான். பொதுவாக மூச்சுத் திணறல், இதய வலி அல்லது மார்பு வலி, மயக்கம் (நினைவு இழப்பு), தலைச்சுற்றல் மற்றும் எடிமா (கால் வீக்கம்) போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். “இதயத்துடன் தொடர்புடைய எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அது பொதுவாக இந்த அறிகுறிகளில் ஒன்றாக வெளிப்படுகிறது. எனவே, எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி) மற்றும் எக்கோ கார்டியோகிராம் போன்ற முறைகளில் அடிப்படை மதிப்பீட்டைச் செய்வது முக்கியம். இதன் மூலம், சிக்கலைப் புரிந்துகொண்டு இதயத்தின் பாதிக்கப்பட்ட பகுதியை அடையாளம் காண முடியும், இதனால் சில அவசரநிலைகளைத் தடுக்க முடியும், ”என்று அவர் மேலும் கூறுகிறார்.
வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான இதயப் பிரச்சனைகள் யாவை?
-
குறைந்த இதயத்துடிப்பு (Bradycardia)
மிகவும் பொதுவான வயது தொடர்பான சிக்கல்களில் ஒன்று குறைந்த இதயத் துடிப்பு அல்லது பிராடி கார்டியா ஆகும். இதய தசைகள் மற்றும் உடலின் மின் தூண்டுதல்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாதபோது இந்த பிரச்சனை ஏற்படுகிறது, இது ரத்தத்தின் உந்தித் தள்ளும் திறனைப் பாதிக்கிறது. அதனால்தான் மக்களுக்குச் சோர்வு அல்லது மயக்கம் ஏற்படுகிறது என்று டாக்டர் குல்கர்னி கூறுகிறார். “சில சமயங்களில், வயதானவர்கள் மயக்கமடைந்து, பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கும் போது என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பிப் போய்விடுவார்கள். அந்த நேரத்தில் இதயத் துடிப்பு மிகக் குறைவாக இருப்பதால் தான் இவ்வாறு நிகழ்கிறது,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
-
இதய மேலறை உதறல் துடிப்பு (Atrial fibrillation) ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்
வயதாகும்போது, இதயத்தின் ரத்த ஓட்ட அமைப்பும் பாதிக்கப்படலாம். இதயத்தின் மின் அமைப்பு சீர்குலையத் தொடங்கும் போது, இதயத் துடிப்பின் வேகம் குறையலாம் அல்லது இன்னும் அதிக வேகமெடுக்கலாம் என்று டாக்டர் டிவிவேதி கூறுகிறார். மிகவும் பொதுவான இதயத் துடிப்பு சிக்கல்களில் ஒன்று இதய மேலறை உதறல் துடிப்பு என்று சொல்லப்படும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆகும், இதனால் இதயத்தின் மேல் அறைகளின் துடிப்பு ஒழுங்கற்ற முறையில் இருப்பதால் இதயச் செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும்.
இந்த இதய மேலறை உதறல் துடிப்பின் காரணமாக இதயத்தில் நிறையச் சிறிய கட்டிகளை ஏற்படுத்துகிறது. இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக, இதயத்திலிருந்து ரத்தம் வெளியேறுவதில் சிக்கல் அல்லது குறைந்த இரத்த ஓட்டம் ஏற்படலாம், இதனால் நினைவு இழப்பு அல்லது நிலையற்ற ரத்த ஓட்ட குறைவு (TIA) ஏற்படக்கூடும்.
-
நிலையற்ற ரத்த ஓட்டக் குறைபாடுகள்
மூளைக்குச் செல்லும் இரத்த விநியோகம் சிறிது நேரம் தடைப்படும் போது, ஒருவருக்கு நிலையற்ற ரத்த ஓட்டக் குறைபாடு (TIA) ஏற்படலாம். இது பற்றி டாக்டர் த்விவேதி கூறுகையில், “மூளைக்கு ரத்தம் செல்லும் போது கொலஸ்ட்ரால் தொகுதிகள் குறுக்கிடுவதால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம். இதுவும் மாரடைப்பு போலவே இருக்கும்.
-
கசிவுள்ள இதய வால்வு
வயதானவர்களுக்கு ஏற்படும் மற்ற பொதுவான பிரச்சனைகளில் ஒன்று இதய வால்வுகளின் சிதைவு, அவை அளவில் குறுகுவதாலும் கசிவதாலும் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது. கால்சியம் படிந்து திசுக்கள் கடினமாவதன் (calcification) காரணமாக பெருநாடி (aortic) மற்றும் மிட்ரல் வால்வுகள் (mitral valve) அதிகம் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலைமைகள் முறையே பெருநாடி வால்வு ஸ்டெனோசிஸ் (aortic valve stenosis) மற்றும் மிட்ரல் வால்வு மீளுருவாக்கம் (mitral valve regurgitation) அல்லது கசிவு இதய வால்வு (leaky heart valve) என்று அழைக்கப்படுகின்றன. இதய வால்வுகளில் கால்சியம் படியத் தொடங்கியவுடன், அது வால்வுகளின் இயல்பான செயல்பாட்டைக் கணிசமாகப் பாதிக்கிறது, இதயம் சுருங்கும்போது வால்வுகள் திறப்பது கடினமாக இருக்கும் என்று டாக்டர் குல்கர்னி விளக்குகிறார்.
-
கரோனரி தமனி நோய்
வயதாகும் போது, ரத்தக் குழாய்களில் கொழுப்பும் கால்சியமும் படியத் தொடங்குவது அதிகரிக்கிறது, இது இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று டாக்டர் திவிவேதி குறிப்பிடுகிறார். தமனிகளில் கொழுப்பு படிவதால், கரோனரி தமனி நோய் ஏற்படுகிறது, இது இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளின் குறுகலுக்கு வழிவகுக்கிறது. இது சில சமயங்களில் எந்த அறிகுறியும் இல்லாமல் கூட இருக்கலாம், இதனால் சில சமயங்களில் மார்பு வலி அல்லது மாரடைப்பு ஏற்படக்கூடும்.
நம் உடலுக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களின் நெகிழ்ச்சித்தன்மை குறைந்து விடுவதால் ரத்த நாளங்கள் விறைப்பாக மாறிவிடுகிறது, இது டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை விட சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.
-
மனம் உடைந்து போவதால் ஏற்படும் இதய நோய்த்தொகுதி
மனம் உடைந்து போவதால் ஏற்படும் இதய நோய்த்தொகுதி என்பது அதிகளவு உணர்ச்சிவசப்படுவதால் ஏற்படுகிறது என்று டாக்டர் திவிவேதி கூறுகிறார். “வயதானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை இழக்கும்போது இது நிகழலாம். இது மனச்சோர்வு இதயச் செயலிழப்பு அல்லது இதயத் துடிப்பில் தொந்தரவுகள் அல்லது மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
-
இதயச் செயலிழப்பு
வயதாகும் போது இதயத் தசைகளில் விறைப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக, இதயம் ரத்தத்தை நன்றாக பம்ப் செய்தாலும் கூட சரியாக ஓய்வெடுக்க முடியாமல் போய்விடுகிறது. இதயத் தசைகளில் ஏற்படும் வடுவின் (cardiac fibrosis) காரணமாக உடலின் மற்ற பாகங்களில் இருந்து இரத்தத்தைக் குவிக்க முடியாமல் போகலாம் “இதனால் உடலில் வீக்கம் ஏற்படுகிறது, ரத்தத்தை வெளியேற்றும் திறன் (preserved ejection fraction) குறைந்து இதயச் செயலிழப்பு ஏற்படுகிறது” என்று டாக்டர் திவிவேதி விளக்குகிறார்.
வேறு ஏதாவது இதயப் பிரச்சனைகள் இருந்தாலும், அது இதயச் செயலிழப்பு போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படக் காரணமாக இருக்கும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் இதயப் பிரச்சனைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
டாக்டர் திவிவேதி கூறுகையில், “உங்களுக்கு வயதாகும்போது, உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது, ஏனெனில் நம்முடைய உடல் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை வளர்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உடற்பயிற்சிகள் மற்றும் உணவு முறை அல்லது சரியான அளவில் கலோரிகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு இது பொருந்தாது, எனினும், ஒவ்வொரு ஐந்தாவது வருடத்திற்கு ஒருமுறை உங்கள் உடலில் மாற்றம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையே முக்கியமானது என்றும், அதை நாம் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். நீங்கள் எவ்வளவு விரைவாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். வயது தொடர்பான இதயப் பிரச்சினைகளை தாமதப்படுத்த வல்லுநர்கள் பின்வரும் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கின்றனர்:
- கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் (BP) மற்றும் நீரிழிவு போன்ற ஆபத்து காரணிகளை நிர்வகித்தல்
- வழக்கமான பரிசோதனைகளைச் செய்துகொள்ளுதல்
- சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல்
- மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளுதல்
- தவறாமல் உடற்பயிற்சி செய்தல்
- புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்தல்
- சரியான நேரத்திற்குத் தூங்குதல்