ஆந்திரப் பிரதேச அரசு, அந்த மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு இந்த த்ரோம்போலிடிக் ஊசிகளை இலவசமாக வழங்குவதால், இந்தத் தகவல் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சியானது கோல்டன் ஹவர் என்று சொல்லப்படும் மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரத்திற்குள் மாரடைப்பிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
த்ரோம்போலிடிக் சிகிச்சை என்றால் என்ன?
எலிவேஷன் மயோகார்டியல் இன்ஃபார்க்ஷன் (STEMI) என்பது ஒரு கடுமையான மாரடைப்பு ஆகும், இதில் இரத்தக் கட்டிகள் காரணமாக இதய தசைச் சுவர் பெரும்பாலும் சேதமடைகிறது. இந்த மாரடைப்பு ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதத்தினருக்கு 50 சதவிகிதத்தினருக்கு அதற்கு முன் இதயம் சார்ந்த எந்த நோய் அறிகுறியும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், த்ரோம்போலிடிக் ஊசிகள் மாரடைப்பை ஏற்படுத்திய தமனியின் இருக்கும் கட்டிகளை (arterial clots) கரைக்க உதவியாக இருக்கும்.
கொல்கத்தாவின் ஃபோர்டிஸ் ஆனந்தபூரில் உள்ள இதயவியல் நிபுணர் டாக்டர் ஷுவானன் ரே கூறுகையில், இந்த ஊசியை மார்பு வலி ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் (கோல்டன் ஹவர்) அல்லது குறைந்த பட்சம் நான்கு மணி நேரத்திற்குள் செலுத்தினால், அது முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டியின் அதே நன்மைகளை அளிக்கும்.
பெங்களூருவின், யஷ்வந்த்பூரில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் பிரதீப் குமார் கூறுகையில், STEMI (ST பிரிவு உயர் மாரடைப்பு) யின் போது எடுக்கப்படும் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) பரிசோதனையில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு மாற்றங்கள் இருப்பதைக் காட்டினால், கூடுமானவரை விரைவாகச் சிகிச்சை செய்யப்பட வேண்டும். இதற்கு உடனடி சிகிச்சையாக ஒரு பலூன் அல்லது ஸ்டென்ட்டைப் பயன்படுத்தும் ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டாலும் கூட, மருத்துவ நிபுணர்கள் மற்றும் கேத் லேப்கள் (catheterization labs) இல்லாததால், குறிப்பாக எந்த வசதியும் இல்லாத கிராமப் பகுதிகளில் உடனடியாகச் செய்ய முடியாமல் போகலாம்.
அவர் மேலும் கூறுகையில், “ST உயர் மாரடைப்பு என்பது மிகவும் கடுமையான மாரடைப்பு ஆகும், இந்த மாரடைப்பின் போது இதயத்தின் தசைச் சுவர் முழுவதும் சேதமடைகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இரத்தம் செல்லக் கூடிய தமனியில் 90 முதல் 100 சதவிகிதம் அடைப்பு இருக்கலாம். எனவே, இரத்த விநியோகம் கிடைக்காத இதயத்தின் பகுதி சேதமடையத் தொடங்குகிறது அல்லது மருத்துவ ரீதியாக, பாதிப்படையத் தொடங்குகிறது.
த்ரோம்போலிடிக் ஊசி
டாக்டர் ரே கூறுகையில், “உங்களுக்கு மார்பு வலி ஏற்பட்ட உடன் நீங்கள், அவசர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுகிறீர்கள், அங்கே உங்களுக்கு அவர்கள் த்ரோம்போலிடிக் மருந்தை நரம்பு ஊசியாக வழங்குகிறார்கள். இது ஒரு எளிய சிங்கிள் ஷாட் ஊசியாகும், இதனால் இறப்பு சதவீதம் 15-20 வரை குறைகிறது. இந்த ஊசி செலுத்துவதால் சிலருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது. அப்படி இல்லையென்றால் மேல்சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்கான கால அவகாசம் உங்களுக்குக் கிடைக்கும். சில சமயங்களில், இதயத் தமனியில் ஒரே ஒரு இரத்த உறைவு கட்டி இருந்தால், அது இந்த த்ரோம்போலிடிக் ஊசி போட்ட உடன், உறைவு கட்டி கரைந்து தமனி பாதைகள் திறக்கப்படுகின்றன. இதனால், உங்களுக்கு மேலும் சிகிச்சை தேவைப்படாது,” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், சர்வதேச வழிகாட்டுதல்களின்படி, மருந்தை செலுத்திய மூன்று முதல் 24 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும். இந்த த்ரோம்போலிடிக் ஊசிகள் 60 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதத்தை கொண்டுள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த த்ரோம்போலிடிக் மருந்தை செலுத்திய பிறகும் கூட தமனிகளில் இருக்கும் அடைப்புகள் திறக்கப்படாமல் போகவும் வாய்ப்புகள் இருக்கிறது, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒருவருக்குத் தொடர்ச்சியான மார்பு வலி இருக்கலாம் மற்றும் அவர்களின் ஈசிஜி சரிவடையாது. “இரத்த ஓட்டத்தில் உறுதியற்ற தன்மை (Hemodynamic instability) அல்லது இதய அதிர்ச்சி (cardiogenic shock) மற்றும் நுரையீரல் வீக்கம் (pulmonary edema) ஆகியவை ஆஞ்சியோகிராம் செய்வதற்கான அறிகுறிகளாகும்” என்று டாக்டர் குமார் கூறுகிறார். மருந்தை உட்கொண்ட 30 – 60 நிமிடங்களுக்குள் இரத்த உறைவு பொதுவாக கரைந்துவிடும் என்பதால், மருந்து செலுத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வழக்கமாக ஒரு ஈசிஜி வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறுகிறார்..
த்ரோம்போலிடிக் ஊசியின் பக்க விளைவுகள்
த்ரோம்போலிடிக் ஊசி கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். ஒருவருக்கு மூளை மற்றும் பிற பகுதிகளில் இரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும், இதய முறிவு (cardiac rupture) மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம். எனவே, வயதானவர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் அல்லது சமீபத்திய அறுவை சிகிச்சை வரலாறு உள்ளவர்களுக்கு இரத்தபோக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை. இருப்பினும், தற்போது கிடைக்கும் புதிய த்ரோம்போலிடிக் மருந்துகளால் அபாயங்கள் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள் .
ஆந்திராவைப் போலவே, தமிழக அரசு சென்னையிலும் இதே முயற்சி மேற்கொண்டதைப் பற்றி டாக்டர் ரே நம்மிடம் பகிர்ந்து கொள்கையில், “இது ஒரு ஹப்-அண்ட்-ஸ்போக் மாடல் (ஒரு விநியோக நெட்வொர்க்) என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று ஈசிஜியை அனுப்பும் மையம் கண்டறிந்த உடன், அவர்கள் த்ரோம்போலிசிஸ் (ரத்தம் உறைதலை உடைக்கும்) ஊசியை ஆர்டர் செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து, நீங்கள் ஆஞ்சியோகிராம் அல்லது ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சையை மேற்கொள்ள அருகில் உள்ள மருத்துவ மையத்திற்குள் செல்லலாம். நாங்கள் அதை மருந்தாக்கச் சிகிச்சை (pharmacoinvasive therapy) என்றும் அழைக்கிறோம், ”என்று அவர் விளக்குகிறார்.
முக்கியக் கருத்துகள்
- கோல்டன் ஹவர் நேரத்திற்குள் செலுத்தப்படும் த்ரோம்போலிடிக் ஊசியானது மாரடைப்பிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற உதவும். இது தமனிகளுக்குள் இருக்கும் ரத்த உறைவைக் கரைக்கிறது, இல்லையெனில் இந்த ரத்த உறைவு இரத்த ஓட்டத்தைத் தடுத்து மாரடைப்பு ஏற்படலாம்.
- அவசர காலங்களில், குறிப்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் கேத் லேப்கள் கிடைக்காத போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- கோல்டன் ஹவருக்குள் இதைப் பயன்படுத்தினால், அது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் அதே பலன்களை அளிக்கும்.
- இந்த ஊசி உள்ளுறுப்புகளில் இரத்தபோக்கு போன்ற கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தும். எனவே, உயர் இரத்த அழுத்தம் அல்லது பக்கவாதம் வரலாறு உள்ளவர்களுக்கும், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் இது வழங்கப்படுவதில்லை.