தர்பூசணி சாற்றில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் நீரிழிவு நோயுள்ளவர்கள் அதை மிதமான அளவே குடிக்க வேண்டும் என்றாலும், தர்பூசணியின் விதைகளில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ரகசியம் அடங்கியுள்ளது. நாம் அதிகம் கவனம் தராத தர்பூசணி விதைகளில் இதயத்திற்கு நன்மை செய்கின்ற, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
“பெரும்பாலான பழங்களின் விதைகளில் அதிக ஊட்டச்சத்துகள் இருக்கும். விதைகள்தான் மொளைவிட்டு செடியாகவும் மரமாகவும் ஆகும் என்பதே அதில் அதிக ஊட்டச் சத்துகள் இருப்பதற்கான காரணமாகும்,” என்று கோவாவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் இருதய நோய் தொடர்பான ஆலோசனை வழங்கும் நிபுணராக உள்ள மருத்துவரான சப்யசாச்சி முக்கோபாத்யாய் கூறுகிறார்.
வல்லுனர்களின் கூற்றுப்படி தர்பூசணி விதைகளில் இரும்புச் சத்து, புரதம், மெக்னீசியம் ஆகியவை அதிகளவு உள்ளன. அதில் வீக்கத்தைக் குறைக்கும் தன்மையுள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு இருப்பதோடு வைட்டமின் B, C, E ஆகியவையும் உள்ளன.
“இந்த விதைகளில் ஆரோக்கியமான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதய நோய், ஹைபர்டென்ஷன், நீரிழிவு நோய், ஆட்டோ-இம்யூன் நோய் (தன்னுடல் தாக்கம்), சிறுநீரக நோய்கள் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு இந்த ஊட்டச்சத்துகள் நன்மை செய்யும்,” என்கிறார் டாக்டர் முக்கொபாத்யாய். இவற்றில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை நொறுக்குத் தீனியாகச் சாப்பிடலாம்.
தர்பூசணி விதைகள் இதயத்திற்குச் செய்யும் நன்மைகள்
ஆரோக்கிய உணவுமுறையின் ஓர் அங்கமாக தர்பூசணி விதைகளை எடுத்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் சர்க்கரை அளவு & கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கும் அவை உதவும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், டிரைகிலஸரைடு அளவுகளைக் குறைக்க உதவுகின்ற MUFA (மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ஸ்), PUFA (பாலி சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ஸ்) ஆகியவையும் அவற்றில் உள்ளன. அதோடு இந்த விதைகளில் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவும்.
இந்த விதைகள் வேசோடைலேட்டர்களாக (ரத்த நாளங்களை அவை டைலேட் செய்யும் அல்லது திறக்கும்) செயல்படும் என்று 360 டிகிரி நியூட்ரிகேரை (ஒரு இ-கிளினிக்) நிறுவியவரும், உணவியல் நிபுணருமான தீபலேகா பேனர்ஜி தெரிவிக்கிறார். அத்துடன், இந்த விதைகளில் உள்ள இரும்புச் சத்து ரத்தம் ஆக்சிஜனைச் சுமந்து செல்லும் திறனை அதிகரிக்கும், அதிலுள்ள ஜின்க்கானது இதயத்தில் கேல்சியம் பரிமாற்றத்தைச் சீராக்கும்.
டைப் 2 நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது என்று ஹைதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவமனையில் சீனியர் எண்டோக்ரைனாலஜிஸ்ட்டான மருத்துவர் சந்தீப் ரெட்டி கூறுகிறார். தர்பூசணி விதைகளை எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் ஆக்சிடேஷன் ஆவது தடுக்கப்படுவதுடன் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதும் தடுக்கப்படும். இதனால் கார்டியோவாஸ்குலார் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் தர்பூசணி விதைகளின் பங்கு
தர்பூசணி விதைகள் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சிறந்த நொறுக்குத் தீனியாக அவை அமையும். அவை இன்சுலின் சென்சிட்டிவிட்டியை (உங்கள் செல்கள் இன்சுலினுக்கு எந்தளவு ரியாக்ட் செய்கிறது என்பதன் அளவு) மேம்படுத்தும். மெக்னீசியமானது கார்போஹைட்ரேட்டின் வளர் சிதை மாற்றத்தை சீர்படுத்தவும் உதவும் என்கிறார் பேனர்ஜி. “இன்சுலின் ரிலீஸ் செய்தல் மற்றும் கார்போஹைட்ரேட்டின் வளர் சிதை மாற்றத்திற்கு மெக்னீசியம் ஒரு அத்தியாவசியமான மைக்ரோ ஊட்டச் சத்தாகும்” என்கிறார் மருத்துவர் ரெட்டி.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தர்பூசணியையும் அதன் விதைகளையும் மிதமான அளவு சாப்பிடலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தர்பூசணியில் அதிக குளுக்கோஸ் இருந்தாலும் அதில் உள்ள கிளைஸிமிக் லோடு (சாப்பிட்டவுடன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் அளவின் கணிப்பு) குறைவு. அத்துடன் அதில் அதிக நீர் இருக்கும் என்கிறார் மருத்துவர் ரெட்டி. இருந்தாலும் தர்பூசணிச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் அவர்.
உங்கள் உணவுமுறையில் தர்பூசணி விதைகளைச் சேர்த்தல்
வெள்ளை மற்றும் கறுப்பு தர்பூசணியின் விதைகள் இரண்டையுமே எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் பேனர்ஜி. அத்துடன் சோறு, சப்பாத்தி, காய்கறிகள் போன்ற உணவுகளில் வழக்கமாக இல்லாத மைக்ரோ ஊட்டச் சத்துகள் இந்த விதைகளில் இருப்பதாக மருத்துவர் ரெட்டி கூறுகிறார். எனவே இதை உங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொள்வது நல்லது.
தர்பூசணி விதைகளை அப்படியேவும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். அவற்றை பழத்தில் இருந்து பிரித்தெடுத்து காய வைக்கலாம். காய்ந்ததும், இந்த விதைகளை சாலட்கள், சான்ட்விச்கள் ஆகியவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம். இல்லையென்றால் அதையே ஒரு நொறுக்குத் தீனியாகச் சாப்பிடலாம்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- இதய நோய், ஹைப்பர் டென்ஷன், நீரிழிவு நோய், சிறுநீரக மாதிப்புகள் மற்றும் உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு தர்பூசணி விதைகள் நன்மை செய்யும். ஏனெனில், அவற்றில் இத்தகையவர்களுக்கு உதவும் வகையிலான மினரல்களும் ஆண்டி-ஆக்சிடன்ட்களும் அதிகம் உள்ளன.
- இந்த விதைகளில் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவும். அத்துடன் ரத்தத்தின் ஆக்சிஜனைச் சுமந்து செல்லும் திறனை இதிலுள்ள இரும்புச் சத்து அதிகரிக்கும். ஜின்ங்கானது இதயத்தில் கால்சியம் பரிமாற்றத்தைச் சீராக்கும்.
- இந்த விதைகள் இன்சுலின் ரெசிஸ்டன்ட்ஸை அதிகரிக்கும் அதே வேளையில் கார்போஹைட்ரேட் வளர் சிதை மாற்றத்தையும் சீராக்குவதுடன் அதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
- தர்பூசணி விதைகளை நொறுக்குத் தீனியாகச் சாப்ப்பிடலாம். அத்துடன், அவற்றைக் காயவைத்து சாலட்கள், சான்ட்விச்கள் ஆகியவற்றில் சேர்க்கலாம்.