ரத்த தானம் என்பது உலகளவில் பல பேரின் உயிர்களைக் காப்பாற்ற உதவும் ஓர் உன்னதமான செயல். ஆனால் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சில கட்டுப்பாடுகள் இருப்பதால் அவர்களுக்கு இது கொஞ்சம் கடினம்தான். சரியான அளவில் சர்க்கரை அளவை வைத்திருப்பது, ரத்த தானத்திற்கு ஏற்றவாறு தயாராவது மற்றும் ரத்த தானம் முடித்த பிறகு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது போன்றவற்றை மேற்கொண்டால் அது ரத்த தானம் செய்பவருக்கும் நல்லது , அதைப் பெறுபவருக்கும் நல்லது என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் ரத்த தானம் வழங்குபவருக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் அதைப் பெறுபவருக்கு அது வராது என்றும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், ரத்த தானம் செய்தபிறகு ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவதால் இன்சுலின் சென்சிட்டிவிட்டி அதிகரிக்கும். இதனால் தற்காலிகமாக இன்சுலின் சுரப்பையும் குளுக்கோஸ் ஏற்புத்தன்மையும் அதிகரிக்கும்.
நீரிழிவு நோயுள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா?
நகரங்களில் உள்ள பல ரத்த வங்கிகள், ரத்த தானம் தர முன்வருபவர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தாலோ அவர்கள் பிற மருத்துவ சிகிச்சைகளில் இருந்தாலோ அவர்களிடமிருந்து ரத்தத்தைப் பெறுவதில்லை என்று பெங்களூரில் உள்ள CMI மருத்துவமனையின் ஆஸ்டர் ஹெமட்டாலஜி, ஹெமட்டோ-ஆன்காலாஜி, பீடியாட்ரிக் ஹெமட்டோ-ஆன்காலஜி & எலும்பு மஜ்ஜைப் பிரிவில், ஆலோசகராக உள்ள மருத்துவர் அனூப் சொல்கிறார். “அப்படி நிராகரிக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களின் ரத்த தானம் செய்தால் அதைப் பெறுபவர்களுக்கு பெரும்பாலும் எந்தப் பெரிய பாதிப்பு ம் ஏற்படாது. நீரிழிவு நோயுக்கு எதிரான மருந்தை எடுத்துக் கொள்பவர்கள் ரத்த தானம் செய்தால் அவர்களின் ரத்தத்தில் இந்த மருந்து கொஞ்சம் இருக்கும் என்பதால், அந்த மருந்து ரத்த தானம் பெறுபவரின் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பது ஓர் அனுமானம் மட்டும்தான்” என்கிறார் அவர். டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் ஹைபர் டென்ஷனை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும்கூட ரத்த தானத்தைத் தவிர்ப்பது நல்லது. ரத்த வங்கிகள் ஏற்றுக்கொண்டால் தாராளாமாக ரத்த தானம் வழங்கலாம் என்கிறார் அவர்.
கட்டுக்குள் வைக்காத நீரிழிவு நோய் உள்ளவர்களிடம் இருந்து ரத்த தானம் பெறுவதைப் பெரும்பாலான ரத்த வங்கிகள், அதை வழங்குபவர் மற்றும் பெறுபவரின் நலன் கருதி தவிர்க்கின்றனர். டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் அவர்களின் ரத்த தானம் வழங்குவதற்கான தகுதி பாதிக்கிறது என்று கொச்சியில் உள்ள KMK மருத்துவமனையின் என்டோகிரைனாலஜி & நீரிழிவு நோய், இன்டர்னல் மெடிசின் ஆகிய துறையில் நிர்வாக இயக்குனர், தலைமை மருத்துவ அதிகாரி & ஆலோசகராக உள்ள, டாக்டர் விநாயக் ஹையர்மத் சொல்கிறார்.
“அத்துடன் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் குறிப்பிட்ட மருந்துகளும் ரத்த தானம் வழங்குவதற்கான அவர்களின் தகுதியை பாதிக்கும். அதனால், இது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் அவர்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம்” என்று சொல்கிறார்.
டைப் 1 நீரிழிவு நோய் மற்றும் ரத்த தானம்
டைப் 1 நீரிழிவு நோய், வழக்கமாக பிள்ளைகள் அல்லது இளம் வயதினருக்கு வரும். அப்படி இருந்தால் தினமும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். “ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதாலும் அதனுடன் பிற நோய்கள் (ரெட்டினோபதி, நியூரோபதி, இதய நோய்கள் மற்றும் நோய் தொற்றுக்கான வாய்ப்புகள்) ஏற்படலாம் என்பதாலும் இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் ரத்த தானம் செய்ய நினைக்கும்போது அதற்குப் பல தடங்கல்கள் இருக்கும்” என்கிறார், மருத்துவர் ஹையர்மேன்.
டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் ரத்த தானம்
டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்வதைப் பொறுத்த வரை அவர்களது நோயின் தாக்கம் மற்றும் சிகிச்சைத் திட்டத்தைப் பொறுத்து அமையும் என்று, மருத்துவர் ஹையர்மத் கூறுகிறார். “கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோயுடன் பிற நோய்களும் இருந்தால் 350 முதல் 400 மில்லி லிட்டர் ரத்தத்தை எடுத்தாலே அவர்களுக்கு மயக்கமோ நிலையற்ற தன்மையோ ஏற்படும்” என்கிறார், மருத்துவர் அனூப்.
அத்துடன் ரத்த வங்கிகளின் தேவைகள், டிமாண்டு மற்றும் சப்ளையைப் பொறுத்தும் அமையும். “ஒரு பகுதியில் ஏதேனும் ஒரு ரத்த வகைக்கு தட்டுப்பாடு நிலவினால் அவர்கள் நீரிழிவு நோயுள்ளவர்களிடம் இருந்தும் ரத்தத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இருந்தாலும், போதுமான ரத்தம் அவர்களிடம் இருக்கும்பட்சத்தில் அவர்கள் அதை நிராகரிக்கக்கூடும்,” என்று அவர் தெரிவிக்கிறார்.
இதற்கான வழிகாட்டுதல்கள் என்ன?
ரத்த தானம் வழங்குபவர் மற்றும் பெறுபவர் ஆகிய இருவரின் நலனையும் கருத்தில்கொண்டு ரத்த தானம் தொடர்பாக தேசியச் சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் சில தகுதிகளை வகுத்துள்ளது. வெவ்வேறு நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளில் இவை அடங்கும்:
♦நேஷனல் பிளட் டிரான்ஸ்ஃபியூஷன் கவுன்சில், இந்தியா
- நீரிழிவு நோயுள்ளவர்கள் தங்களின் ரத்த சர்க்கரை அளவை உணவுமுறை அல்லது மருந்து மூலம் கட்டுக்குள் வைத்திருந்தால் அவர்கள் ரத்த தானம் செய்யலாம்
- இன்சுலின் டிபென்டென்ட்டாக உள்ளவர்கள் ரத்த தானம் செய்ய முடியாது
♦ அமெரிக்கன் ரெட் கிராஸ் சொசைட்டி
- நீரிழிவு நோய் போன்ற நாற்பட்ட நோய் உள்ளவர்கள் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு நோய் கட்டுப்பாட்டில் இருந்தால் அவர்கள் மட்டும் ரத்த தானம் வழங்கலாம்.
♦ NHS பிளட் மற்றும் டிரான்ஸ்பிளான்ட், UK NHS
- நீரிழிவு நோயுள்ளவர்கள் உணவுமுறையின் மூலமாக மட்டும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலோ, நான்கு வாரங்கள் அல்லது அதற்கும் மேல் ஒரே மருந்துகளை எடுத்துக்கொண்டாலோ ரத்ததானம் செய்யலாம்.
- தொடர்ச்சியாக இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலோ கடைசி நான்கு வாரங்களுக்குள் இன்சுலின் எடுத்துக்கொண்டு இருந்தாலோ ரத்த தானம் செய்ய முடியாது.
- மாரடைப்பு மற்றும் பிற இணை நோய்கள் இருந்தால் ரத்த தானம் செய்ய முடியாது.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- பல ரத்த வங்கிகள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம் என்பதால் நீரிழிவு நோயுள்ளவர்கள் ரத்த தானம் செய்வது சவாலானதாக இருக்கலாம். இருந்தாலும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஆனால் அவர்கள் அதற்குத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- நீரிழிவு நோய் மற்றும் அதன் இணை நோய்களைக் கட்டுக்குள் வைக்கப் பயன்படுத்தும் சில மருந்துகள் ஒரு நபரின் ரத்த தானம் வழங்கும் தகுதியில் தாக்கம் ஏற்படுத்தும்.
- ரத்த வங்கிகளின் தேவைகளானது, டிமாண்டு மற்றும் சப்ளையைப் பொறுத்தும் அமையும். குறிப்பிட்ட பகுதியில் ஒரு ரத்த வகைக்கு தட்டுப்பாடு நிலவினால் அவர்கள் நீரிழிவு உள்ளவர்களின் ரத்தத்தையும் ஏற்க வாய்ப்புள்ளது.
- ஹைப்போ கிளைஸீமியா போன்ற நிலைகள் ஏற்படாமல் தடுக்க நீரிழிவு நோயுள்ளவர்கள் தங்களின் ரத்த சர்க்கரை அளவை ரத்த தானத்திற்கு முன்பும் பின்பும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக, அவர்கள் நல்ல ஓய்வு எடுக்க வேண்டும் என்பதுடன் ஊசி போட்ட இடத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று அடிக்கடி சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.