தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு உருவாகும் லாக்டிக் அமிலத்தால் தசைச் சோர்வும் வலியும் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாக நிபுணர்களோ அல்லது ஆராய்ச்சியாளர்களோ தெரிவிக்கவில்லை.
மும்பையைச் சேர்ந்த சர் எச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ ஆலோசகர் கிறிஸ்டோபர் பெட்ரா, “உடல் செயல்பாடுகளின் போது தசைச் சோர்வு மற்றும் நரம்பு முனைகளின் அதிக உணர்திறன் காரணமாக தசையில் வலி ஏற்படுகிறது, இது நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது” என்கிறார். “இருப்பினும், சிலசமயம் உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் புண்கள் பொதுவாக 24 முதல் 72 மணிநேரங்களுக்கு இடையில் உச்சத்தை அடைகிறது, இது DOMS [உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படும் தசை வலி] என குறிப்பிடப்படுகிறது. இது பொதுவாக நுண்ணிய தசை சேதத்தின் விளைவாக ஏற்படுகிறது [தசைகள் சிறிய அளவில் கிழிவது] நீங்கள் தசைகளை மிகவும் சிரமப்பட்டு பயிற்சி செய்யும் போது ஏற்படும். அதன் பின்னர், உங்கள் உடலின் அந்தப் பகுதி வலுவடைகிறது, அது தன்னைத் தானே மாற்றியமைத்து கொண்டு வலுவான தசை நார்களை உருவாக்குகிறது..”
உடற்பயிற்சிக்குப் பிறகு தோன்றும் தசைவலி (DOMS) மற்றும் லாக்டிக் அமிலம்
தீவிர உடற்பயிற்சியின்போது, போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் தசைகள் கடினமாக வேலை செய்யும்போது லாக்டிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது, இந்த அமிலம் தான் டிஓஎம்எஸ் அல்லது உடற்பயிற்சிக்குப் பிந்தைய தசை சோர்வுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், பல்வேறு ஆராய்ச்சி ஆய்வுகள் இந்தக் கருத்தை மறுத்துள்ளன. லாக்டிக் அமிலம் உங்கள் தசைகளிலிருந்து விரைவாக அகற்றப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகிறது; நீங்கள் மூச்சுக் காற்றை உள்இழுத்தவுடன் இது ஆற்றலாகவும் பயன்படுத்தப்படலாம்.
“நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கும்போது, உங்கள் செல்கள் ஆற்றலுக்காக குளுக்கோஸை உடைக்கின்றன. இருப்பினும், அந்தச் செயல்முறையின் ‘கழிவுப் பொருளான லாக்டேட்டால்’ தானாகவே ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும்” என்று பெட்ரா கூறுகிறார். உங்கள் மூளை, கல்லீரல், தசைகள் மற்றும் இதயம் போன்ற உங்கள் உடலில் உள்ள சில திசுக்கள் அந்த லாக்டேட் மூலக்கூறுகளை நேரடியாக ஆற்றலுக்காகப் பயன்படுத்தலாம். கூடுதலாக, அவை மீண்டும் கல்லீரலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பைருவேட்டாக (குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தின் துணை தயாரிப்பு) மாற்றப்பட்டு, பின்னர் குளுக்கோசாக ரத்தத்தில் கலக்கலாம். எனவே, இது உங்கள் உடலில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்றல்ல” என்று அவர் விளக்குகிறார்.
தி பிசிசியன் அண்ட் ஸ்போர்ட்ஸ்மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையில், ஷ்வான் ஜேஏ அட் அல் என்பவர் லாக்டிக் அமில உற்பத்தியால் தான் உடற்பயிற்சிக்குப் பிறகு தசை வலி (DOMS) ஏற்படுகிறது என்ற கருத்தின் உண்மைத்தன்மையைச் சோதித்தனர். பங்கேற்பாளர்களின் இரத்தத்தில் லாக்டிக் அமில அளவு ஒரு ட்ரெட்மில்லில் ஓடுவதற்கு முன்னும் பின்னும் அளவிடப்பட்டது (நிலை மற்றும் அசைவு இரண்டும்).
கூடுதலாக, ஓடிய பிறகு வெவ்வேறு நேர இடைவெளிகளில் (24, 48 மற்றும் 72 மணி நேரம்) தசை நலிவுற்றதை மதிப்பிடுமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது. நலிவுற்ற போதிலும் ஓட்டப்பந்தய வீரர்களில் லாக்டிக் அமில செறிவுகள் அதிகரிக்கவில்லை என்று முடிவுகள் வெளிப்படுத்தின, இது தீவிர உடற்பயிற்சியால் தூண்டப்பட்ட டிஓஎம்எஸ் (DOMS) உடன் தொடர்புடையது அல்ல என்பதைக் குறிக்கிறது
மசாஜ்கள் மற்றும் லாக்டிக் அமிலம்
மசாஜ்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தசை இறுக்கத்தைக் குறைப்பதன் மூலம் தளர்வு மற்றும் தசை வலியிலிருந்து தற்காலிகமாக நிவாரணம் அளிக்கும் அதே வேளையில், அவை தசைகளில் இருந்து லாக்டிக் அமிலத்தை திறம்பட அழிக்கின்றன என்ற கருத்தை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
“உங்கள் உடல் சுற்றுச்சூழலுக்கேற்ப தங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு சீராக பாதுகாத்துக் கொள்ளும் (homeostasis) நிலையைப் பராமரிக்கிறது, உங்கள் இரத்த ஓட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான லாக்டேட்டைத் தக்க வைத்துக் கொள்கிறது. உடல் இயக்கத்தை அளவிடும் உடற்பயிற்சிகளைச் செய்யும் போது இது அதன் இயல்பான செறிவை பல மடங்கு அதிகரிக்கலாம்,” என்கிறார் பெட்ரா.
இரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற இயற்கையான செயல்முறைகள் மூலம் லாக்டிக் அமிலம் பொதுவாக உடலில் இருந்து அகற்றப்படுகிறது. “லாக்டிக் அமிலம் உடலில் இருப்பது நல்லதல்ல என்று மக்கள் நம்புவதால், மசாஜ்கள் மற்றும் பிற சீரற்ற நுட்பங்களைச் சார்ந்துள்ளனர். எனினும், இது உண்மையல்ல. உங்கள் உடல் லாக்டேட் செறிவூட்டலை ஆற்றலாகப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது நீங்கள் உடற்பயிற்சி செய்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அதை அகற்றுவதன் மூலமோ அது தன்னுடைய இயல்பான நிலைக்குத் திரும்புகிறது,” என்கிறார் பெட்ரா.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியின்படி, உடற்பயிற்சியின் பின்னர் தசை வலி மற்றும் சோர்வு ஏற்படுவதற்கு லாக்டிக் அமிலம் காரணமல்ல.
- லாக்டேட்டால் தானாக ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும், இது மூளை, கல்லீரல், தசைகள், இதயம் போன்ற பல திசுக்களால் பயன்படுத்தப்படலாம்.
- லாக்டிக் அமிலம் பொதுவாக இரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற இயற்கை செயல்முறைகள் மூலம் உடலில் இருந்து அகற்றப்படுகிறது; மசாஜ்கள் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன