ஓடுவதால் நமக்கு ஏற்படும் சிக்கல்கள், இடைஞ்சல்கள் அல்லது தீமைகளை விட அதிக நன்மைகளே கிடைக்கிறது. இத்தனை குறைகள் இருந்தாலும் கூட ஓடுவது என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகத் தான் இருக்கிறது. ஓடுவதால் நம்முடைய தோல் எந்த அளவுக்குச் சேதமாகிறது என்பது நீண்ட காலக் கேள்வியாக இருக்கிறது. உதாரணமாக, நீண்ட தூரம் ஓடும் ஓட்டப்பந்தய வீரர் தன்னுடைய முகத்தை பெருமையுடன் பாதுக்காப்பார். ஆனால், அவருடைய சருமம் அதன் இயற்கைத் தன்மையை இழப்பது என்பது நல்ல விஷயம் கிடையாது.
ரன்னரின் முகம் (runner’s face) ஏற்பட என்ன காரணம்?
ரன்னர் ஃபேஸ் என்பது அனுபவமுள்ள ஓட்டப்பந்தய வீரர்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கப் பயன்படும் சொல் ஆகும். தளர்வான, சுருங்கிய மற்றும் வயதான (சுருக்கமான மற்றும் கடினமான தோல்) முகமும் தோலும் அதன் பொலிவை இழந்து சோர்வாக இருப்பது என்பது ஓர் ஓட்டப்பந்தய வீரரின் முகத்தில் பொதுவாக தோன்றும் அறிகுறிகள் ஆகும். சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் தோல் மருத்துவரான டாக்டர் சுபாஷினி மோகன் கூறுகையில், “நீண்ட நேரம் ஓடுபவர்கள், சருமத்தை மிருதுவாகக் காட்டுவதற்காக கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஃபைபர்களைப் பயன்படுத்துகிறார்கள், இதனால் சருமம் அதன் நெகிழ்ச்சித் தன்மையை இழக்க நேரிடும்.
நீண்ட தூரம் ஓடுவதால் கலோரிகள் எரிக்கப்படுகிறது, இதனால் முகக் கொழுப்பு உட்பட உடல் கொழுப்பும் இழக்கப்படுகிறது. முகத்தில் கணிசமான அளவில் கொழுப்பு அடுக்கு இருக்கும், அதை இழப்பதால் உங்களுடைய உடல் மெலிந்து, முகத்தில் குழி விழுந்து தோற்றமளிக்கும், இத்துடன் கடுமையான காலநிலையும் சேர்ந்து, கொலாஜன் மற்றும் எலாஸ்டினை பாதிக்கும், இதனால் தோல் விரைவில் வயதான தோற்றத்தை அளிக்கத் தொடங்கும். புற ஊதா கதிர்கள் மேல் தோலின் செல்களைச் (தோலின் வெளிப்புற அடுக்கில் உள்ள செல்கள்) சேதப்படுத்தி, கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இழைகளைச் சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை வெளியிடுவதால், சூரிய ஒளியில் நீண்ட நேரம் ஓடும் போது தோலில் முன்கூட்டியே சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
முக தசை மற்றும் கொழுப்பு குறைவதால், பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்க்க முடியாமல் தசைகள் தளர்ந்து தொய்வடையத் தொடங்கும். “சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதால், சருமத்தை தாங்கும் அல்லது இறுக்கமாக வைத்திருக்கும் முகத் தசைகள் தளர்ச்சியடைந்து விடுகின்றன” என்கிறார் டாக்டர் சச்சித் ஸ்கின் கிளினிக்கின் தோல் மருத்துவ ஆலோசகரும், பெங்களூரு மணிபால் மருத்துவமனையின் மூத்த ஆலோசகருமான டாக்டர் சச்சித் ஆபிரகாம். “நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருந்தால், கொலாஜன் மற்றும் எலாஸ்டின் சேதமடைகிறது, இதனால் முகத்தில் சுருக்கங்களும் தளர்ச்சியும் ஏற்படுகிறது. நீங்கள் தொடர்ந்து ஓடும் போது, சருமத்தின் உறுதித்தன்மையைச் சீர்குலைகிறது.
‘ரன்னரின் முகம்’ பிரச்சனையை எவ்வாறு குறைப்பது
சில எளிய நடவடிக்கைகள் மூலம் விளையாட்டு வீரர்கள் ‘ரன்னரின் முகம்’ ஏற்படுவதைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.
சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பின் ஓடுவதுச் சிறந்தச் செயலாக இருக்கும். “மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஓடுவதைத் தவிர்க்கலாம். இது கடுமையான புற ஊதா கதிர்களின் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள உதவியாக இருக்கும்,” என்கிறார் டாக்டர் மோகன். இது சாத்தியப்படவில்லை எனில், சூரிய ஒளியால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் (sunspots) மற்றும் சுருக்கங்களைத் தவிர்க்கக் காற்றோட்டமான ஆடைகள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் கவசங்களான தொப்பிகளையும் கை முழுவதும் மூடும் ஆடைகளையும் அணியலாம்.
ஓடுவதற்கு முன் நல்ல சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம். உண்மையில், ஓட்டப்பந்தய வீரர்கள் சன்ஸ்கிரீனைத் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும், இதனால் அவர்கள் உடற்பயிற்சியின் போது ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையோ அல்லது அதற்கும் மேலாக அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். SPF 50 மதிப்பீட்டைக் கொண்ட புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும் (broad-spectrum sunscreen) சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அத்துடன் இவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், மேலும் சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும், இதில் அதிகளவில் ஆரோக்கியமான கொழுப்பு இருக்க வேண்டும். ஒரு சத்தான உணவு ஃப்ரீ ரேடிக்கல்களை (free radicals) அகற்ற உதவுகிறது மற்றும் தோல் கொழுப்பு இழப்பைத் தடுக்கிறது.
நீண்ட நேரம் தொடர்ந்து ஓடுவதால் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் நீர் இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஓடும்போது உங்களைத் தொடர்ந்து நீரேற்றமாக வைத்திருப்பது சருமத்திற்கு நீரிழப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
ஓட்டப்பந்தய வீரர்கள் பின்பற்ற வேண்டிய தோல் பராமரிப்பு நடைமுறைகள்
ஓட்டப்பந்தய வீரர்களுக்கான முதல் விதி, கடினத் தன்மை கொண்ட சோப்களைப் (harsh soap) பயன்படுத்தி அடிக்கடி முகத்தைக் கழுவக்கூடாது, ஏனெனில் இது சருமத்தில் இருந்து இயற்கையான ஈரப்பதத்தை நீக்குகிறது.
மேலும், இவர்கள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் சீரான இடைவெளியில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். ஓட்டப்பந்தய வீரர்கள் ஓடும் போது அதிகமாக வியர்க்கும், அதில் சன்ஸ்கிரீன் அகற்றப்பட்டுவிடும். அதனால் தான் இவர்கள் அடிக்கடி சன்ஸ்க்ரீனை பயன்படுத்துவது அவசியமாகிறது. மேலும் இவர்கள் தங்களுடைய சருமத்தை மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, சருமம் வயதாவதைத் தடுக்கும் ரெட்டினோல் (retinol) கொண்ட கிரீம்களை இரவில் பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமான உணவு, உடலை நீரேற்றமாக வைத்திருத்தல் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துதல் ஆகிய மூன்றும் சருமத்தைப் பராமரிக்கவும், ‘ரன்னரின் முகம்’ ஏற்படுவதைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- ரன்னர் ஃபேஸ் என்பது நீண்ட தூரம் ஓடும் ஓட்டப்பந்தய வீரர்களிடையே பொதுவாகக் காணப்படும் தோலில் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது அடிப்படையில் நம்முடைய சருமத்தின் மீது நீண்ட நேரம் சூரிய ஒளி படுவதால் ஏற்படுகிறது.
- இந்த நிலையில், முகம் தொய்வாகவும், சுருங்கியும், கடினமாகவும் தோற்றமளிக்கும். இது சருமத்திற்கு முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்பட வழிவகுக்கிறது.
- இந்தப் பிரச்சனைகளைக் குறைக்க, ஓட்டப்பந்தய வீரர்கள் சன்ஸ்கிரீன் கிரீம்களைப் பயன்படுத்த வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் சத்தான உணவை உண்பதும் ‘ரன்னரின் முகம்’ பிரச்சனையை நிர்வகிக்க உதவியாக இருக்கும்.