தசைகள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் காயம் அல்லது வீக்கம் முதல் நரம்பு வலி (nerve compression) அல்லது எரிச்சல் (irritation) வரை பல்வேறு காரணங்களால் வலி தூண்டப்படலாம் அல்லது ஏற்படலாம். சிலருக்கு இது சில நாட்களிலேயே சரியாகி விடும், மற்றவர்களுக்கு இது பல ஆண்டுகளுக்குக் கூட தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். வலிக்கான காரணத்தைப் பொருட்படுத்தாமல், உடலின் பாதிக்கப்பட்டப் பகுதியிலிருந்து, வலிக்கான சமிக்ஞைகளைச் செயல்படுத்தி வலியை உணரச் செய்வதில் நம்முடைய மூளையும் நரம்பு மண்டலமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த சமிக்ஞை பொறிமுறையில் கவனம் செலுத்தி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலி அறிவியல் மற்றும் பிசியோதெரபி துறைகளில் வல்லுநர்களான டாக்டர் லோரிமர் மோஸ்லி மற்றும் டேவிட் பட்லர், ஆகியோர் கிரேடட் மோட்டார் இமேஜரியை வடிவமைத்தனர், இது 2000களின் முற்பகுதியில் மூளை பிளாஸ்டிசிட்டி என்ற கருத்தின் அடிப்படையில் வலியைச் சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. (புதிய நரம்பியல் இணைப்புகளை உருவாக்குவதன் மூலம் படிப்பது, அனுபவம் அல்லது காயத்தின் விளைவாக மூளையின் மறுவடிவமைப்பு மற்றும் மாற்றியமைக்கும் திறன்)
நாள்பட்ட வலி உள்ளவர்களுக்கு வலி மற்றும் இயக்கத்திற்கான மூளையின் எதிர்வினைகளை மாற்றியமைத்து வலியைக் குறைக்க கிரேடட் மோட்டார் இமேஜரி உதவியாக இருக்கிறது.
கிரேடட் மோட்டார் இமேஜரி என்றால் என்ன?
நாள்பட்ட வலிக்கான சிகிச்சைக் கருவியான கிரேடட் மோட்டார் இமேஜரி, ஆஸ்திரேலியாவில் உள்ள நியூரோ ஆர்த்தோபெடிக் இன்ஸ்டிடியூட் (NOI) ஆல் ஊக்குவிக்கப்படுகிறது, இது வலி சமாளிப்பு, நரம்பியல், சுகாதாரச் செயல்திறன் மற்றும் கைமுறை சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் செயல்திறன் மிக்க ஒரு சுகாதார வள நெட்வொர்க் ஆகும். இந்த நியூரோ ஆர்த்தோபெடிக் இன்ஸ்டிடியூட் (NOI) ஆனது டாக்டர் மோஸ்லி மற்றும் டாக்டர் பட்லரால் நிறுவப்பட்டது.
“இதற்கு முன்னர் ரிஃப்ளெக்ஸ் சிம்பதெடிக் டிஸ்ட்ரோபி (RSD) என அழைக்கப்பட்ட காம்ப்லக்ஸ் ரீஜினல் பெயின் சிண்ட்ரோம் (CRPS) மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா (fibromyalgia) போன்ற பிரச்சனைகளை நாங்கள் வகைப்படுத்துகிறோம், இந்த பிரச்சனைகள் ஏற்பட்டால் குணமாகும் காலமான மூன்று மாதங்களைக் கடந்தும் நீண்ட காலத்திற்கு வலி நீடிக்கும், இது நாள்பட்ட வலி (chronic pain) என்று , NOI க்காக இந்தியாவில் தரப்படுத்தப்பட்ட மோட்டார் இமேஜரி அமர்வுகளை நடத்தும், மும்பையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்டான டாக்டர் பிரகாஷ் R ஷரோஃப் கூறுகிறார். “நம்முடைய உடல் குணமடைவதற்கான காலம் கடந்தும் குணமாகவில்லை என்றால், நாம் அனுபவிக்கும் ஒட்டுமொத்த வலியில் நரம்பு மண்டலம் முக்கியப் பங்கு வகிப்பதை நாங்கள் கவனித்தோம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
“வலியை விளக்குவது” என்ற கருத்தைப் புரிந்து கொள்ளாமல் கிரேடட் மோட்டார் இமேஜரியைப் பற்றி உங்களால் புரிந்து கொள்ள முடியாது,” என்று ஷரோஃப் கூறுகிறார்.
வலியை விளக்குவது என்பது அறிவு சார்ந்த அணுகுமுறையாகும், இது வலியின் சிக்கலான தன்மையையும் அதன் அடிப்படை காரணங்களையும் பற்றி மக்கள் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. வலி என்பது நமக்கு ஏதாவது காயமோ அல்லது சேதாரமோ ஏற்பட்டால் மட்டுமே உண்டாவது கிடையாது, உள்ளுணர்வு, உணர்வாற்றல் மற்றும் முந்தைய அனுபவங்கள் குறித்து மூளையில் பதிவாகியிருக்கும் தகவல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படும் பல பரிமாண அனுபவம் ஆகும்.
கிரேடட் மோட்டார் இமேஜரிகளின் மூன்று நிலைகள்
ஆறு வாரங்களுக்கு மூன்று நிலைகளில் இந்த கிரேடட் மோட்டார் இமேஜரி என்பது நடத்தப்படுகின்றன, ஒவ்வொரு நிலையும் (ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம்) இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். நிலைகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:
இடது வலதாக உணர்ந்து கொள்ளுதல் (Laterality recognition)
இடது வலதாக உணர்ந்து கொள்ளுதல் என்பது வலி உடலின் இடது பக்கத்தில் ஏற்படுகிறதா அல்லது வலதுபக்கத்தில் ஏற்படுகிறதா என்பதை வேறுபடுத்தி அறியும் திறனைச் சரிபார்க்கும் ஒரு பரிசோதனை ஆகும். வலியை மறுசீரமைக்கும் செயல்முறைக்கு இந்தத் திறன் மிகவும் முக்கியமானது.
“ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நபருக்குக் கையில் காயம் ஏற்பட்டுவிட்டது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அது இடது பக்கமா மற்றும் வலது பக்கமா என்பதை வேறுபடுத்திப் பார்ப்பது தற்போது அவருக்கு கடினமாக இருக்கலாம்” என்கிறார் ஷரோஃப். “எங்களிடம் ஒரு கருவி உள்ளது, இது ஒரு நபரின் இடது மற்றும் வலதுபுறத்தை வேறுபடுத்துவதற்கான திறனை மதிப்பிட உதவியாக இருக்கும், இது அவர்கள் நீண்ட காலத்திற்கு வலியில் இருக்கும்போது ஏற்படும் மாற்றத்தை அளவிட உதவும். இந்தப் பரிசோதனையில் இருக்கும் பல்வேறு கூறுகளுக்குப் பதிலளிக்க 1 முதல் 1.5 வினாடிகள் வரை கால அவகாசம் வழங்கப்படும். பரிசோதனையில் துல்லியமான முடிவுகளைப் பெற, மொத்த மதிப்பெண் 80% க்கு மேல் இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும் கூறுகிறார்.
விஷுவல் இமேஜிரி (Visual imagery)
நம் மூளை செல்களில் இருக்கும் நியூரான்களில் 25% இருக்கும் மிரர் நியூரான்கள் நம் உடலில் வலி அதிகமாக இருக்கும் பகுதியை அசைக்க வேண்டும் என்று நாம் நினைக்கும் போதே வலிக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. நீங்கள் அசைவதாக கற்பனை செய்யும் போது (உண்மையில் நகரும் போதும்) மூளையின் அதே பகுதிகளைத்தான் பயன்படுத்துகிறீர்கள்.
“வலி அதிகமாக இருக்கும் உடல் பாகத்தை அசைக்கும் போதோ, அல்லது பயன்படுத்தும் போதோ எந்த வலியும் இல்லாமல் சாதாரணமாக இருப்பது போல விஷுவல் இமேஜிரியில் நாங்கள் காட்சிப்படுத்துகிறோம். இதன் மூலம், இந்த அம்சம் பயன்படுத்தப்படும்போது பொதுவாக செயல்படும் அதே மூளை சுற்றுகளை நாங்கள் பட்டியலிடுகிறோம், ”என்று ஷரோஃப் கூறுகிறார்.
மிரர் தெரபி (Mirror therapy)
மிரர் தெரபி என்பது வலிக்கும் உடல் பாகத்தின் மறுபக்கத்தில் இருக்கும் வலியில்லாத பகுதியின் பிரதிபலிப்பைக் காட்டுவதாகும். வலியுள்ள பகுதியை நகர்த்துவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று மூளையை நம்ப வைக்கும், மிரர் தெரபியானது எதிர் பகுதியின் இயக்கத்தைச் சிரமமின்றி பிரதிபலிக்கிறது. இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட உடல் பாகத்தை எளிதாக அசைக்கலாம். இவ்வாறு செய்யும்போது எந்த வலியும் ஏற்படாது என்ற உணர்வு நம்முடைய மூளையில் புதிதாகப் பதியத் தொடங்குகிறது.
கிரேடட் மோட்டார் இமேஜரியின் தனித்துவமான அணுகுமுறை
“கிரேடட் மோட்டார் இமேஜரி என்பது உடலின் வெளிப்பகுதியில் ஏற்படும் வலியை நிர்வகிப்பதற்கான மற்ற சிகிச்சைகளில் இருந்து வேறுபடுகிறது” என்கிறார் ஷரோஃப்.
ஒரு நபர் வலியை அனுபவிக்கும் விதம் என்பது மூளையின் செயல்பாட்டால் பாதிக்கப்படலாம். வலியை அனுபவித்துக் கொண்டிருக்கும் நபருக்கு அவர்களின் மூளையில் இருக்கும் அம்சங்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றித் தெரியாது. கிரேடட் மோட்டார் இமேஜரி பரிசோதனைகள், வலியால் ஏற்படும் துன்பம் அல்லது உணர்வில், அவர்களின் மூளை எந்த அளவுக்கு பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. கூடுதலாக, இந்த செயல்முறையின் போது அவர்கள் எந்த அளவுக்கு படிப்படியாக குணமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- கிரேடட் மோட்டார் இமேஜரி என்பது மூளை பிளாஸ்டிசிட்டி என்ற கருத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வலி மேலாண்மைக்கான ஒரு புதிய நுட்பமாகும், இது நாள்பட்ட வலி உள்ளவர்களுக்கு வலிக்கான மூளையின் எதிர்வினைகளை மாற்றியமைக்க உதவுகிறது.
- வலியின் சிக்கலான தன்மை மற்றும் அதன் மூல காரணங்களைப் புரிந்துகொள்ள உதவும் கிரேடட் மோட்டார் இமேஜரியைப் புரிந்துகொள்வதற்கு வலியை விளக்குதல் என்ற கருத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.