பிள்ளையை டேகேருக்கு அனுப்புவது பெற்றோர்களுக்குக் கவலை அளிக்கும் விஷயமாகும். பெங்களூரைச் சேர்ந்த 32 வயதான பிரியா சாஹா இரண்டு ஆண்டுகள் கழித்து பணிக்குத் திரும்ப வேண்டி இருப்பதால் டேகேர் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அவர் ஜூலை மாதம் 2019-இல் 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் ஆன தனது பெண் குழந்தையை டேகேரில் சேர்த்துவிட்டார். “இதற்கு அவளை நான் மூன்று மாதங்கள் தயார் செய்தேன்” என்கிறார் பிரியா. அவரது பிள்ளை டேகேருக்குப் பழக இரண்டு வாரங்கள் ஆனது.
“வீட்டைப் போலவே இருக்கும் டேகேர் மையத்தைத் தேர்வுசெய்யவும்” என்று கர்நாடகா கவுன்சில் ஆஃப் ப்ரீஸ்கூல்ஸ் அண்டு எ சீசன்டு எஜுகேஷ்னல் கன்சல்டன்ட்டின் செயலாளர் ப்ருத்வி பன்வாசி கூறுகிறார். பிள்ளைகள் இயல்பாக இந்த மாற்றத்திற்குப் பழக, டேகேரில் இருக்கும்போது வீட்டில் இருப்பது போலவே பிள்ளைகள் உணருமாறு அதன் சூழல் இருக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு முன்பு வரை அவர்கள் தங்களின் தாத்தா பாட்டிகளுடன் மட்டுமே இருந்திருப்பார்கள்.
மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த, குழந்தை வளர்ப்பு ஆலோசகர் மற்றும் குடும்பநல கவுன்சிலர் ஹிமான்ஷி குப்தே மேல் சொன்ன கருத்தை ஏற்கிறார். அதேவேளையில் “சூழல், அதில் பணியாற்றுபவர்கள், கற்பிக்கின்ற & கற்பிக்காத பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் குழந்தையை எப்படிக் கையாள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். “டேகேரானது பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்துவதாக இருக்க வேண்டும். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்கு டேகேரைத் தேடும்போது படிப்பைவிட சமூகச் சூழலைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் பிள்ளையை எப்போது டேகேரில் சேர்க்க வேண்டும்?
டேகேரில் சேர்ப்பதற்கான வயது வரம்பு, ஒரு வருடம் ஆறு மாதங்கள் முதல் 12 அல்லது 14 வயது வரை (சில அரிதான சூழல்களில்). இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சற்று அதிக வயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது குறைவான நேரமே டேகேரில் இருப்பார்கள் என்று குப்தே கூறுகிறார். “டேகேரில் சேர்வதற்கு முன் குழந்தையானது அடிப்படைத் தொடர்பு மொழியைக் கற்றிருக்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.
யூகேவில் உள்ள நார்விச்சைச் சேர்ந்த லாரா அவிஸ் (43) என்ற ஹோம்மேக்கர் தன் இரண்டு வயது மகனை 2021-இல் டேகேரில் சேர்த்தார். “தன் மகனுக்கு முன்னேற்றம் மெதுவாகவே இருந்ததாக அவர் கூறுகிறார். தொடக்கத்தில் ஒரு மணிநேரமோ இரண்டு மணிநேரமோ மட்டுமே இருந்த அவன் படிப்படியாக முன்னேறி நாள் முழுவதும் அங்கிருக்க பழகிக் கொண்டான்” என்று அவர் நினைவுகூறுகிறார்.
கோவாவில் உள்ள கானகோனாவில் ஹெல்த் அண்டு எமோஷன் என்ற நிறுவனத்தை நிறுவியவரும், குழந்தை மனநல ஆலோசகராவும் உள்ள மகப்பேறு மருத்துவர் ராஜலக்ஷ்மி டேகேரில் சேர்ந்து முதல் நாள் செல்வதற்கு முன்பு பிள்ளையை டேகேருக்குக் கூட்டிச் செல்வது நல்லது என்று தெரிவிக்கிறார். “குழந்தையை முன்பே தயார் செய்வதால் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படாது. பிரிவு என்ற உணர்வை பிள்ளைக்குப் படிப்படியாக வழங்குவது முக்கியமாகும் என்கிறார் அவர்.
டேகேரில் பிள்ளை: இந்த மாற்றம் எப்போதுமே எளிது கிடையாது
டேகேருக்குப் பழகுவது என்பது பிள்ளைகளுக்கு சிரமமான விஷயம்தான். ஏனென்றால் புது சூழலுக்குப் பழக அவர்களுக்கு நேரமாகும். “அதற்குத் தயார் படுத்துவதும் பிள்ளைக்கு ஏற்ற சூழலுமே இதில் முக்கியம்”, என்கிறார் குப்தே. “தொடக்கத்தில் நான் அவனுடனே இருக்க வேண்டும் என்று என் பிள்ளை விரும்பினான். இருந்தாலும் டேகேரில் இருப்பவர்கள் பிள்ளைகள் இந்தச் சூழலுக்குக் காலப்போக்கில் பழகிக்கொள்வார்கள் என்று உறுதி அளித்தனர்” என்று ஹேப்பியஸ்ட் ஹெல்த்திடம் அவிஸ் கூறினார்.
2021-இல் நார்வேவில் உள்ள ஒஸ்லோவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வீட்டில் இருந்து சைல்டு கேருக்கு அனுப்பப்படும் பிள்ளைகளுக்கு அதிகளவில் கார்டிசால் (ஸ்ட்ரெஸ் ஹார்மோன்) சுரப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தமானது பெற்றோர்களிடம் இருந்து பிரிகின்றபோது அதிகமாக இருக்கும். அவர்கள் மீண்டும் சேரும்போது அது பெருமளவில் குறைந்துவிடும்.
பிரியா தன் மகளை டேகேரில் விட்டுவிட்டுச் செல்லும்போது ஒரு வாரம் வரை சில நிமிடங்கள் அழுதாள் என்கிறார். “ஆனால் ஓரிரு வாரங்கள் கழித்து சிரித்த முகத்துடன் என்னை வழியனுப்பினாள். அது எனக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது” என்கிறார் அவர்.
அத்துடன், பிள்ளைகளை டேகேருக்கு அனுப்புவது பெற்றோர்களுக்கும் அதிக மன வலியைத் தரும். தனது பிள்ளை பள்ளிக்குச் செல்லும் முன்பே சுயமாக சில விஷயங்களைச் செய்துகொள்ளும் அளவிலும், அவன் யாரைச் சார்ந்தும் இருக்கக் கூடாது என்று விரும்புவதாகவும் லாரா தெரிவிக்கிறார். “இருந்தாலும் அவன் கதவருகே அழுவதைப் பார்த்து வருத்தம் அடையாமல் இருக்க முடியாது” என்கிறார் அவர். டேகேரில் பணிபுரிபவர் நாள் முழுவதும் அங்கு அவன் செய்வதை படம் பிடித்து அனுப்புவது மனதிற்கு ஆறுதலாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
டேகேரில் சேர்ப்பதற்குப் பிள்ளையைத் தயார்படுத்துவது எப்படி?
“சில அடிப்படையான வாக்கியங்களைப் பேசவும், அவர்களே சாப்பிடவும், டாய்லெட்டைப் பயன்படுத்தவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்” என்று குப்தே தெரிவிக்கிறார். பிரியா, தனது பிள்ளைக்கு தாய் மொழி மட்டுமே தெரியும் என்பதால் டேகேரில் பயன்படுத்தப்படும் மொழி அவளுக்குப் புரியுமா என்று பயந்தார். “ஆனால் நானே ஆச்சரியப்படும் வகையில் என் மகள் ஆங்கிலத்துடன் சில கன்னட வார்த்தைகளையும் அங்கே கற்றுக்கொண்டுவிட்டாள்” என்று அவர் கூறினார்.
பெரும்பாலான பெற்றோகளுக்கு இருக்கும் இன்னொரு கவலை என்னவென்றால் சுகாதாரம் மற்றும் வசதிகள். “அவளுக்கு கையைச் சுத்தமாக வைத்துகொள்வது, டிஃபன் பாக்ஸில் இருந்து உணவை எடுத்துச் சாப்பிடுவது ஆகியவற்றை டேகேர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பே பழக்கப்படுத்தினேன். இருந்தாலும், சாப்பிடுவதற்கு அவள் அடம் பிடிப்பாள் என்பதால் அங்கிருந்த பணியாளரிடம் அவள் சாப்பிடும்போது அவள் மேல் ஒரு கண் வைக்குமாறு தெரிவித்தேன்” என்கிறார் பிரியா.
பை, தண்ணீர் பாட்டில், டிஃபன் பாக்ஸ் போன்றவற்றைக் கவனாமாக வைத்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள் என்று குப்தே அறிவுரை வழங்குகிறார்.
பிள்ளை வீட்டில் இருப்பதைப் போலவும் பாதுகாப்பாகவும் உணர வேண்டும்
புதிய சூழல் பிள்ளைகளை வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என்று பன்வாசி கூறுகிறார். “டேகேரானது இன்ஃபார்மலாக இருக்க வேண்டும். அதாவது பிள்ளைகள் தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்று பிற பிள்ளைகளுடன் விளையாடுவது போன்ற உணர்வைத் தருவதாக இருக்க வேண்டும்” என்று அவர் விளக்குகிறார். அத்துடன் ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட பழக்க வழக்கத்தையும் டேகேர் பணியாளர் புரிந்து வைத்திருக்க வேண்டியது முக்கியமாகும்.
பிள்ளைகளின் ஆடை மற்றும் உணவில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். “பிள்ளைகளின் ஆர்வம் அந்த வயதில் மிக அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு வசதியாக உள்ள ஆடைகளை அணிவிப்பதும் குறைந்த நகைகள் அணிவிப்பதும் அவர்களின் பாதுகாப்பிற்கு நல்லது” என்று அவர் கூறுகிறார். “அத்துடன் பிள்ளைகளின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் இரைப்பையில் எந்த நோய்த் தொற்றும் ஏற்படாமல் இருக்கவும் பெற்றோர்கள் அவர்களுக்கு ஆரோக்கியமான, ஃப்ரெஷ்ஷாகச் சமைத்த உணவைத் தயாரித்து வழங்க வேண்டும்” என்றும் கூறுகிறார்.
உங்கள் பிள்ளையை டேகேரில் சேர்க்கும் முன்பு சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டும். அத்துடன் குறைவான குழந்தைகள் உள்ள மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள டேகேரில் பிள்ளைகளைச் சேர்ப்பது நல்லது என்று குப்தே கூறுகிறார்.
தெரிந்து கொள்ளவேண்டியவை
- வீட்டைப் போலவே உள்ள டேகேர் மையத்தைப் பெற்றோர்கள் தேர்வுசெய்ய வேண்டும். அத்துடன், அதன் சூழல், வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில்கொள்வதுடன் கற்பிக்கும் மற்றும் கற்பிக்காத பணியாளர்கள் பிள்ளைகளைக் கையாளத் தெரிந்தவர்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.
- சில அடிப்படையான வாக்கியங்களைப் பேசவும், அவர்களாகவே சாப்பிடவும், டாய்லேட்டைப் பயன்படுத்தவும் தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டியது மிக முக்கியமாகும்.
தங்கள் பிள்ளைகளின் ஆடை மற்றும் உணவில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் அவர்களுக்கு வசதியான ஆடைகளை அணிவதையும், ஆரோக்கியமான, ஃப்ரெஷ்ஷான உணவைத் தயார் செய்து பேக் செய்வதையும் பெற்றோர்கள் உறுதிசெய்ய வேண்டும்.