728X90

728X90

0

0

1

0

0

1

0

0

1

இந்த கட்டுரையில்

சாம்பாரில் ஒரு சாம்பார்!!
100

சாம்பாரில் ஒரு சாம்பார்!!

சாம்பாரில் வெல்லம் சேர்ப்பது கர்நாடகாவில் வழக்கம் என்றாலும் தமிழர் பார்வையில் அது ஒரு வினோதம். கர்நாடகாவின் ‘இனிப்பு’ சாம்பாரின் பின்னணியைத் தோண்டிப் பார்க்கும் ஒரு முயற்சி இது.

ஒரு பகுதியில் வழக்கமாக இருக்கும் பழக்கம், இன்னொரு பகுதியில் வினோதமானதாக இருக்கலாம். அதே போல, ஒரு பகுதியில் வினோதமானதாகக் கருதப்படும் விஷயம் இன்னொரு பகுதியில் வழக்கமான ஒன்றாக இருக்கலாம். ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் செல்லும் ஒருவர் அங்கே வழக்கமாகப் பின்பற்றும் ஒன்றை வினோதமாகக் கருதினால் அதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் குற்றமாகக் கருதாமல், அது ஏன் அந்தப் பகுதியில் ஒரு வழக்கமானது என்று புதியவருக்கு விளக்கிக் கூற வேண்டும்.

வினோதமாய் இருப்பதாலேயே அது நகைப்பை உண்டாக்கக்கூடியதாக புதியவருக்குத் தோன்றினாலும் அதை கேலி செய்வதற்கு பதிலாக அதற்கான விடையைக் கேட்டறிந்துகொள்ள வேண்டும். 

எதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் விவாதிக்க உள்ளது ஒரு சர்ச்சையான தலைப்பு. நான் இரு தரப்பிற்கும் பொதுவானவன் என்று என்னைக் காட்டிக்கொண்டால்தான் என் தலை தப்பும்! அதற்குதான் இந்தப் பீடிகை.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்!

மென்மையாக இருப்பவரை நம் ஊரில் ‘சாம்பார்’ என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த சாம்பாரிலேயே ஒரு சாம்பார் இருக்கிறது. அதுதான் ‘கர்நாடகா சாம்பார்’. பெங்களூருவிற்கு வரும் பெரும்பாலான தமிழர்களுக்கு இனிப்பாக இருக்கும் இந்த கர்நாடகா சாம்பார் ஒரு வினோதம்தான். ஆனால் தமிழர்களுக்கு வினோதமாகத் தெரியும் ‘இனிப்பு சாம்பார்’ கர்நாடாகாவைப் பொறுத்தவரை வழக்கமான விஷயம். அந்த சாம்பாரின் பின்னணியைத் தோண்டி ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

சாம்பார் கடந்து வந்த பாதை

சாம்பாரில் கன்னடர்கள் வெல்லம் சேர்ப்பதற்கான காரணம் அறியும் முன் சாம்பாரின் வரலாறை அறிவது முக்கியம். ஏனென்றால் அது ஒரு சுவாரஸ்யமான கதை. உணவுகளின் வரலாற்றை ஆராய்பவர்கள் இந்த சாம்பார் உருவானது தொடர்பாக பல கதைகளைக் கூறுகின்றனர். 

பெரும்பாலான கதைகளில் மராட்டிய மன்னர் சாம்பாஜியைச் சம்பந்தப்படுத்திக் கூறுகிறார்கள். சத்ரபதி சிவாஜியின் புதல்வர்தான் சாம்பாஜி.

தஞ்சாவூரில் மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவியவர் சத்ரபதி சிவாஜியின் இளைய சகோதரர் எக்கோஜி. அவரது புதல்வர் ஷாஹுஜி. ஒருமுறை சாம்பாஜி தனது சித்தப்பா மகனான ஷாஹுஜியைக் காண தஞ்சை வந்திருந்தபோது சமையலில் கெட்டிக்காரரான ஷாஹுஜி, சாம்பாஜிக்கு அவரே ஒரு சிறப்பான உணவைத் தயாரித்துத் தர விரும்பினார். அவர் தயாரிக்க நினைத்தது மராட்டிய ரெசிபியான ‘அம்தி தால்’.

அதைத் தயாரிக்க முயன்றபோது வழக்கமாகப் பயன்படுத்தும் கோக்குமிற்குப் பதிலாக புளியைப் பயன்படுத்தினார். துவரம் பருப்பிற்கு பதிலாக பாசி பருப்பைப் பயன்படுத்தினார். அதோடு அதில் சில காய்கறிகளைச் சேர்த்தார். இவ்வாறு தயாரித்த ரெசிபியை தனது விருந்தினரான அவரது ஒன்றுவிட்ட சகோதரரான சாம்பாஜிக்கு வழங்கினார். அதை ருசித்த சாம்பாஜிக்கு அது மிகவும் பிடித்துப் போகவே அதைக் குறித்து ஷாஹுஜியிடம் கேட்க, இது தானே புதிதாக முயன்றதாக ஷாஹுஜி சொன்னாராம். அதோடு இதை முதலில் ருசித்த சாம்பாஜியின் பெயரிலேயே இதைக் குறிப்பிடலாம் என்று கருதி ‘சாம்பார்’ என்று பெயர் வைத்தாராம். 

சாம்பாரை சாம்பாஜியுடன் தொடர்புபடுத்தி கூறும் இன்னும் சில கதைகள் இருந்தாலும், இதில் நாம் பொதுவாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், மராட்டிய ரெசிபியான ‘அம்தி தால்’ தயாரிக்கப் போய் உருவானதுதான் ‘சாம்பார்’.

இது சாம்பாருக்கு ஒரு சாரார் வழங்கும் விளக்கம். ஆனால் தமிழகத்தில் இதற்கு ஆதாரத்துடன் வேறு விளக்கம் தரப்படுகிறது.

“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”(South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha[4]) என்று ஒரு கல்வெட்டுப் பதிவு உள்ளது. 

இதன் பொருள்:

“கறியமுது பல சம்பாரம”—- பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல் என்று பொருள்.

“நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக”—- அதாவது நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்பதாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

இதன்படி பார்த்தால் சாம்பார் தமிழ்நாட்டில் பல காலங்களாகவே சமைக்கப்படுகின்ற உணவாகவே கொள்ள முடிகிறது.

அதோடு, மராட்டியர்களின் கீழ் தஞ்சை 1675-ல்தான் வந்தது. அனால் இந்தக் கல்வெட்டின் காலம் 1530. இந்த ஆதாரத்தின்படி சாம்பார் மராட்டியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கூற்று முற்றிலும் மறுக்க வேண்டியதாகவே உள்ளது.

கர்நாடகா சாம்பாரில் இனிப்பு சேர்ப்பதற்கான காரணம்:

ஒரு சாரார் ஷாஹுஜிதான் சாம்பாரைக் கண்டுபிடித்தார் என்கின்றனர். ஆனால் தமிழ் கல்வெட்டின்படி பார்த்தால் சாம்பார் என்பது அதற்கு முன்பே தமிழ் மண்ணில் சமைக்கப்பட்டிருக்க்கிறது. இந்தப் புள்ளிகளையெல்லாம் இணைத்துப் பார்த்தால் கர்நாடக சாம்பாரில் வெல்லம் சேர்ப்பதற்கான விடை நமக்குக் கிடைக்கும்.

ஆம். ஷாஹுஜி தமிழகத்தை ஆண்ட மராட்டிய மன்னர். எனவே சாம்பார் என்ற ரெசிபி தமிழகத்தில் சமைக்கப்படுவது அவருக்குக் கண்டிப்பாக அப்போதே தெரிந்திருக்கும். ‘அம்தி தால்’ மராட்டிய ரெசிபி. அவர் ஒரு மராட்டியர் என்ற முறையில் இந்த ‘அம்தி தால்’ ரெசிபியும் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆக, அவர் மராட்டிய ரெசிபியான ‘அம்தி தால்’ மற்றும்’ தமிழக ரெசிபியான ‘சாம்பார்’ இந்த இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு ரெசிபியைத் தயாரித்துள்ளார்.

இப்போதுதான் கர்நாடக சாம்பாரில் வெல்லம் சேர்ப்பதற்கான ரகசியத்தை உடைக்கப் போகிறேன். அம்தி தாலில் கோக்கும், துவரம் பருப்பு ஆகிய மூலப் பொருட்களோடு, வெல்லம் சேர்ப்பார்கள். அதுதான் அம்தி தாலின் இயல்பான தயாரிப்பு முறை. 

ஷாஹுஜி என்ன செய்திருக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் வழக்கமாகச் செய்யப்படும் சாம்பாரைத் தயாரித்துவிட்டு, (அதாவது கோக்குமிற்குப் பதிலாக புளியையும் துவரம் பருப்பிற்கு பதிலாக பாசி பருப்பையும் பயன்படுத்தி) அதில் அம்தி தாலில் வெல்லம் சேர்ப்பதுபோல் வெல்லம் சேர்த்திருக்க வேண்டும்

உண்மையில் சொல்லப்போனால், தமிழக சாம்பாரைத் தயாரித்துவிட்டு அவர் அதில் சற்று வெல்லம் சேர்த்துள்ளார். அவ்வளவே. ஆக மொத்தத்தில் அம்தி தாலில் இருந்து சாம்பார் உருவாகவில்லை. பாரம்பரிய சாம்பாரில் ஷாஹுஜி வெல்லம் சேர்த்து ஒரு சாம்பாரை செய்திருக்க வேண்டும். அதை தன் விருந்தினரான சாம்பாஜிக்கு கொடுத்திருக்க வேண்டும். அதன் பெயரை சாம்பாஜி, ஷாஹுஜியிடம் கேட்க அவர் ‘சாம்பார்’ என்று கூற, ‘என் பெயர் போலவே இருக்கிறதே’ என்று அவர் வியந்திருக்க வேண்டும். இந்தக் கதை மருவி சாம்பாஜி என்ற பெயரில் இருந்துதான் சாம்பார் வந்ததாக திரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழகத்திற்கு சாம்பார் புதிதல்ல என்பதால், சாம்பாரில் வெல்லம் சேர்க்கும் பழக்கம் இல்லை. மராட்டிய ராஜ்ஜியம் கர்நாடகாவின் பல பகுதிகளில் கோலோச்சியுள்ளது. அந்த சமயங்களில் ஷாஹுஜி தயாரித்த ‘இனிப்பு’ சாம்பார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதாவது தமிழக ரெசிபியான சாம்பார், கர்நாடகாவிற்குள் ஷாஹுஜியின் வெல்லம் கலந்த சாம்பாராகச் சென்றுள்ளது. அதனால்தான் கர்நாடக சாம்பார் இனிப்பாக இருக்கிறது.

ஆனால் எது எப்படியாக இருந்தாலும், இந்தியா முழுவதும் பல விதமாகத் தயாரிக்கப்படும் சாம்பார் ஒரு சமநிலையான ஊட்டச்சத்துகள் உள்ள உணவு எனலாம்.

அதில் சேர்க்கப்படும் காய்கறிகளில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பல ஊட்டச் சத்துகள் இருக்கின்றன. பருப்பில் புரதம் இருக்கிறது. அதில் சேர்க்கப்படும் மஞ்சளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ‘குர்குமின்’ இருக்கிறது. கர்நாடக சாம்பாரில் சேர்க்கப்படும் வெல்லத்தில், பல ஊட்டச்சத்துகள் அடங்கி இருக்கின்றன. எனவே கர்நாடகாவின் இனிப்பு சாம்பாரில் உண்மையில் கூடுதல் நன்மை அடங்கியுள்ளது எனலாம்தானே!

தமிழ்நாடு சாம்பார் வெல்லம் சேர்க்காத வெறும் ‘சாம்பார்’.

கர்நாடகா சாம்பார் வெல்லம் சேர்த்த ‘சாம்பார்+’.

எனவே தமிழர்கள் முகம் சுழிக்காமல் கர்நாடக சாம்பாரைச் சுவைத்து மகிழுங்கள். பழகிவிடும். எனக்குப் பழகியதைப் போல.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

One Response

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
கட்டுரை
நெஞ்சு வலி வந்தாலே அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக சொந்த வைத்தியம் செய்யாமல் விரைந்து மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கட்டுரை
இயற்கை தேநீர் வகைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் இயற்கை சேர்மங்கள் நிரம்பியுள்ளன. எனவே இது உடல் எடை இழப்பிற்கு உதவும்.
கட்டுரை
ஒன்பது முதல் 12 வயது வரையிலான பெண்களுக்கு HPV தடுப்பூசியை வழங்குவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்
கட்டுரை
2024 முடிவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது
கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்

0

0

1

0

0

1

0

0

1

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.